அஹோராத்ரபுஷ்கரிணி

திருவிண்ணகரப்பன் என்னும் ஸ்ரீநிவாஸனுடைய ஆலயத்திற்குள் வடபுறத்தில் " அஹோராத்ர புஷ்கரிணி" என்ற ஒரு பொய்கை இருக்கின்றது. இதற்கு இந்தப் பெயர் வந்த காரணம் வருமாறு :-

முன்னொரு காலத்தில் " தேவசர்மா" என்ற ஓரந்தணன், வேதங்களிலும் அவற்றின் அங்கங்களிலும் கரை கண்டவன், பரத்வாஜ முனிவரின் மரபில் தோன்றியவன், சாஸ்திரங்கள் பலவற்றையும் கற்றறிந்தவன். அவன் ஒரு கால் காதல் நோய்வாய்ப்பட்டு சோலையில் பூக்கொய்து கொண்டிருந்த ஜைமினி முனிவரின் புத்திரியைக் கட்டயப்படுத்திச்சேர்ந்தான். அக்கன்னி தன் தந்தையான ஜைமினி முனிவரின் நிலையையறிந்து மிகச்சினந்து தம் புதல்வியைக் கெடுத்த அந்தணனைக் கிரௌஞ்சமென்னும் பட்சியாகுமாறு சபித்தார்.

 

தேவசர்மா அதைக்கேட்டு மிக வருந்தித் தன் குற்றத்தை மன்னித்து சாபத்தினின்றும் விடுவிக்கும்படி அவரடிகளில் விழுந்து தொழுது வேண்டினான். அம்முனிவர் கருணைகூர்ந்து அவனைப் பறவையுருக்கொண்டவுடன் மார்க்கண்டேயசேஷத்ரம் சென்று ஆலயத்திற்குள் இருக்கும் பொய்கைக் கரையில் ஒரு மரக்கிளையில் தொங்கி நிற்கும்படியும், பின் ஒருகால் அந்தக் கிளை ஒரு புயற்காற்றினால் பொய்கையில் விழும்போது அதன் புண்ணிய நீர் அப்பறவையின் மீது பட்டு சாபம் நீங்குமென்றும் கூறினார். இவ்வாறு ஜைமினி முனிவர் உரைத்ததும் அவ்வந்தணன் உடனே கிரௌஞ்சமெனும் பறவையுருப் பெற்றான்.

 

திருவிண்ணகரில் எம்பெருமானது ஆலயத்துள் இருக்கும் பொய்கைக் க்ரையில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் அப்பறவை தொங்கிக் கொண்டு நின்றது. சில நாள் கழிந்தபின் முனிவர் கூறியபடி ஒரு பெரும் புயல் வீசியது. அதனால் நள்ளிரவில் அக்கிளை புஷ்கரிணி நீரில் விழுந்தது. அப்பொழுது அந்த நீர் பறவையின் மீது பட, பறவை சுய வடிவம் பெற்றது.

 

பறவையுரு நீங்கப்பெற்ற அந்தணன் புஷ்கரிணித் தீர்த்தத்தின் பெருமையால் அங்கு வந்த ஒரு தெய்வீக விமானத்தில் ஏறிக்கொண்டு வைகுந்தத்திற்குப் புறப்பட்டன். அப்பொழுது நீர்க்கடவுளாகிய வருண்னுடைய ஏவலாளர்கள் அவ்வந்தணனை நோக்கி " அந்தணா ! இரவில் ஒரு சாமத்திற்குப் பிறகு புண்ணிய தீர்த்தங்களில் நீராடக் கூடாதென்பது விதி. அவ்வாறு செய்பவர்களைத் தண்டிக்குமாறு எங்கள் தலைவர் கட்டளையிட்டிருக்கிறார். நீ இந்த நள்ளிரவில் எப்படி இப்பொய்கையில் நீராடலாம்? நீ தண்டனைக்கு உரியவன்" எனக் கூறித் தடுத்தனர். தெய்வீக விமானத்தைக் கொண்டுவந்த விஷ்ணுதூதர்கள் அச்சொல்லைக் கேட்டு வருண தூதர்களை நோக்கி " நண்பர்களே ! உண்மையான தருமத்தையும் இந்தப் பொய்கையின் பெருமையையும் அறியாமல் ஏன் இவ்வாறு கூறினீர்கள்? இப்பொய்கைக்கு மட்டும் உள்ள தனிஸ் சிறப்பை உங்கள் தலைவனான வருணனைக் கேட்டுத் தெளிமின் என்று கூறி அவ்வந்தணனை அழைத்துக் கொண்டு வைகுந்தம் சென்றனர். அன்று முதல் அப்பொய்கை "அஹோராத்ர புஷ்கரிணி" எனப் பெயர் பெற்று விளங்குகிறது. அந்தப்புஷ்கரிணியின் மேற்புறத்தில் உள்ள துளசி செடியின் அடியில் அமர்ந்து திருவஷ்டாஷரத்தை ஜபித்து, தாம்பூலம் தஷிணை இவற்றுடன் அறுசுவையன்னத்தைப் பிறர்க்கு அளிப்பவன் எல்லாப் பாவங்களும் நீங்கப் பெற்று வைகுந்தத்தை அடைவான். செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமையிலும் திருவோணம், தான் பிறந்த நட்சத்திரம் இவற்றிலும் அந்தக் குளத்தில் நீராடி எம்பெருமானைத் தரிசிப்பவன் வைகுந்தம் சேருவான் என பெரியோர்கள் அருளி உள்ளனர்.

 

  
 
 

 

die besten online casino

Copyrights © 2009 - 2010 Arulmigu Venkatachalapathiswami Temple Oppiliappan Koil All Rights Reserved
Site design and Maintained by Anna Silicon