19.மற்ற உட்கட்டிடங்கள்

உட்பிராகாரத்தில் மேற்புறத்தில் பெருமாள் பஞ்ச பர்வங்களில் எழுந்தருளியிருப்பதற்கு ஏற்ப அழகிய ஒரு சலவைக் கருங்கல் மண்டபம் இருக்கிறது. வெளி மண்டபத்தின் வடபுறத்தில் ஆழ்வார்கள் ஸந்நிதியை அடுத்து, பெருமாள் டோலோத்ஸவத்திற்குப் பாங்கான மற்றொரு அழகிய சலவைக்கருங்கல் மண்டபம் (ஊஞ்சல் மண்டபம்) திகழ்கிறது. அதன் அருகே மேற்கு நோக்கி விசித்திர வேலைப்பாடு அமைந்த பெருமாள் திருப்பள்ளி அறை அமைந்துள்ளது. இரண்டு (புரட்டாசி, பங்குனி) ப்ரஹ்மோத் ஸவங்களிலும் திவ்ய தம்பதிகள் தலப்புறப்பாட்டிற்குப் பின் திருப்பள்ளியறையில் எழுந்தருளியிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

தென்புறத்தில் உத்ஸவ காலங்களில் ஹோமம் முதலிய வைதிக காரியங்களுக்கு ஏற்ற ஒரு யாகசாலை உள்ளது. அதற்குச்சிறிது தூரத்தில் ஒரு பெரிய திருமடைப்பள்ளி இருக்கின்றது. வெளியே வரும் போது வாஹன மண்டபம் உள்ளது. கருடன் ஸந்நிதிக்குப் பின்புறத்தில் த்வஜஸ்தம்பமும் பலிபீடமும் அவற்றுக்கு வடபுறத்தில் புஷ்கரிணிக்கரையில் எட்டுக்கால் மண்டபம் அமைந்துள்ளது.இம்மண்டபத்தில் பெருமான் தீர்த்தவாரி தினங்களிலும் எழுந்தருளுவது உண்டு. கருடன் ஸந்நிதிக்குத் தென்புறம் மிக விசாலமான, அழகிய கோடி மண்டபம் உள்ளது. இது பல புனித நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுகிறது. ஐப்பசி மாதத் திருவோணத்தில் எம்பெருமான் திருக்கல்யாணம், அதைத்தொடர்ந்து 12 நாள் கலைநிகழ்ச்சிகள், பிரார்த்தனை திருக்கல்யாணங்கள் முதலியவை இங்கு தான் நடைபெறுகின்றன.20. வெளிக்கட்டிடங்கள்

ஸந்நிதி வீதியில் தென்பாகத்தில் தேவஸ்தானத்திற்கு சொந்தமாய் இரண்டு பெரிய திருமண சத்திரங்கள் உள்ளன. இவற்றில் நவீன முறைக்கு ஏற்ப மின்விளக்கு, மின்விசிறி முதலிய சௌகரியங்கள் உள்ளன. விவாஹம் முதலியன நடத்துபவர்களுக்கு இவை மிகவும் அனுகூலமாய் இருக்கும். பெருஞ்சமையலுக்கு வேண்டிய பாத்திரங்களும் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. ஸந்நிதித்தெருக்கோடியில் கோரதம் நிறுத்தும் மண்டபமும், திருத்தேர் மண்டபமும் உள்ளன.

திருக்கோயிலுக்கு வெளியே தென்புறம் எட்டு அறைகள் கொண்ட அழகிய யாத்திரிகர் விடுதி ஒன்று அமைந்துள்ளது. யாத்திரிகர்கள் தங்குவதற்கு நவீன வசதிகளுடன் உள்ள இந்த அறைகளுக்குக் குறைந்த கட்டணமே விதிக்கப்பட்டுள்ளது.21.திருநந்தவனம்

சந்நிதிக்குள் வெளி ப்ராகாரத்திற்கு மருங்கில் ஒரு திருநந்தவனமும், ஆலயத்தின் தென்புறத்தில் 1/2 கீ.மீ. தூரத்தில் ஒரு பெரிய திருநந்தவனமும் உள்ளன. இவ்வெம்பெருமானுக்கு நாடோறும், விசேஷ உத்ஸவங்களுக்கும் பயன்படுமாறு திருமாலைகளுக்கு வேண்டிய புஷ்பங்களும் திருத்துழாயும் மேற்படி திருநந்தவனத்தில் இருந்து கிடைக்கின்றன. இதன் நடுவில் பெருமாள் எழுந்தருளி வசந்த உத்ஸவம் 6 நாள் கண்டருள்வதற்காக ஒரு பெரிய மண்டபம் உள்ளது.

 


 
 
 

 

Copyrights © 2009 - 2010 Arulmigu Venkatachalapathiswami Temple Oppiliappan Koil All Rights Reserved
Site design and Maintained by Anna Silicon